புதுடெல்லி: டெல்லியில் இன்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பழைய ராஜிந்தர் நகர் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் முட்டியளவு தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் மத்திய டெல்லியில் 112.5 மி.மீ மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு மணி நேரத்தில் 112.5 மி.மீ என்பது மேகவெடிப்பின் போது பதிவாகும் அளவு ஆகும். எனினும் டெல்லியில் மேகவெடிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து வானிலை மையம் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதிகாரிகள் முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக மூன்று மாணவர்கள் உயிரிழந்த பழைய ராஜிந்தர் நகர் பகுதியிலும் தற்போது மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக இரவு 7.30 முதல் 8.00 மணி வரை பத்து விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் 30 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லியில் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Waterlogging witnessed at the Makar Dwar of Parliament after incessant rainfall in the national capital. pic.twitter.com/41qZhDASUZ
— ANI (@ANI) July 31, 2024