மும்பையில் ரோவர் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் டோம்பிவலி கிளையில் சிவ்குமார் என்பவர் மேலாளராக இருந்தார். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் மீது கடன் கொடுத்துவிட்டு தங்கத்தை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். சமீபத்தில் கம்பெனி தரப்பில் மேலிடத்தில் இருந்து வந்த அதிகாரிகள் லாக்கரில் இருந்த தங்க நகைகளை ஆடிட் செய்தனர். இதில் 260 பாக்கெட்களில் இருந்த 29 கிலோ தங்கம் காணாமல் போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21 கோடியாகும். தங்க நகைகள் இருந்த பாக்கெட்கள் அனைத்தும் காலியாகி இருந்தது. லாக்கர் சாவி கிளை மேலாளர் சிவ்குமாரிடம் தான் இருக்கும்.
எனவே இது குறித்து கிளை மேலாளர் சிவ்குமார் மற்றும் மண்டல பொறுப்பாளர் சிவாஜி பாட்டீல் ஆகியோரிடம் விசாரித்த போது ஆரம்பத்தில் மழுப்பலாக பதில் சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு உண்மையை ஒப்புக்கொண்டனர். வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த தங்கத்தை எடுத்து அதில் ஒரு பகுதியை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளனர். மற்றொரு பகுதியை விற்பனை செய்து பணம் வாங்கியுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் சிவ்குமார் 8 கோடியை வைத்துக்கொண்டு, பாட்டீலுக்கு 40 லட்சத்தை கொடுத்துள்ளார். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக சிவ்குமார் தெரிவித்துள்ளார்.
தங்க வியாபாரி சச்சின் மூலம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாகவும், ஆனால் பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்க நகைகளை திரும்ப கொடுக்கும்படி கம்பெனி அதிகாரி ஆகாஷ் கேட்டதற்கு, தங்களுக்கு மாஃபியாக்கள் தெரியும் என்று கூறி சிவ்குமார் மிரட்டி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் மீது ஆகாஷ் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவ்குமார், சிவாஜி பாட்டீல், சச்சின் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88