திருவனந்தபுரம்,
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால், அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முற்றிலும் உருகுலைந்து போயுள்ளன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இதற்கு முன் கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளது. முண்டக்கை, சூரல் மலை போன்ற மலை கிராமங்களை காண முடியாத அளவு சேதம் அடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்டமலை, சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் காணாமல்போய் உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் மீட்பு குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் முகாமிட்டுள்ளனர். மருத்துவ முகாம்களில் கூடுதல் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சூரல் மலை பகுதியில் மின்விநியோகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்றவேண்டியுள்ளது.
வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 ம் தேதி மாலைதான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. நிலத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேஜர் ஜெனரல் எம்.இந்திரபாலன் குழுவின் உதவி கோரப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண நிதி மூலம் கேரளா அரசின் வரவு செலவுகளுக்கான கணக்கு இல்லை என்ற வதந்தி பரப்பப்படுகிறது. அதில் உண்மைகள் இல்லை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வெளிப்படையானது. வயநாடு பெரும் நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை (ஆகஸ்ட் 01) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.