சென்னை: சென்னையில் நேற்று பணி ஓய்வுபெற்ற 26 போலீஸாருக்கு சான்றிதழ் வழங்கி காவல் ஆணையர்அருண் பாராட்டி வழியனுப்பி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றிய 14 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உட்பட26 பேர் நேற்றுடன் பணி ஓய்வுபெற்றனர். 25 முதல் 39 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அவர்களுக்கு பிரிவு உபசார விழா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது.
இந்நிலையில் பணி ஓய்வு பெற்றவர்களை அழைத்து தமிழக காவல்துறைக்கும் சென்னை பெருநகரகாவல் துறைக்கும் சேவையாற்றியதை நினைவு கூர்ந்து அனைவருக்கும் சால்வை, மாலை அணிவித்து பாராட்டியதுடன் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், பணி ஓய்வுபெற்ற போலீஸார் தங்களது உடலையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும்.ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோகுறைகள் தெரிவிக்க விரும்பினாலோ நேரில் சந்தித்து முறையிடலாம் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) கபில்குமார் சி.சரட்த்கர், இணை ஆணையர் கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா மற்றும் ஓய்வுபெற்ற போலீஸாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.