காய்கறிகளுக்கான செலவினங்களை கட்டுப்படுத்த, நமக்கு பேருதவியாக கைகொடுப்பது வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ அமைத்திருக்கும் காய்கறித் தோட்டம்தான்.
வீட்டிலேயே குறைந்த செலவில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு அரசுகள் உதவி வருகின்றன. தமிழக அரசைப் போன்றே புதுச்சேரி மாநில அரசும் மாடித்தோட்ட கிட்களை வழங்கி வருகிறது. மாடித்தோட்டத்துக்கான கிட்டோடு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதுச்சேரி அரசு வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க, காய்கறி விதைகள் கொண்ட கிட்டை வழங்கி வருகிறது.
புதுச்சேரி தோட்டக்கலைத்துறை மாடித்தோட்டம் அமைப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளாக ஆடிப்பட்ட பருவத்திற்கு ரூ. 4 லட்சம் வரை செலவு செய்து வருகிறது.
இத்திட்டத்தின்படி, பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் காய்கறி விதைகள் கொண்ட பெட்டியில், முதல் ரக விதைகள் உள்ளன. தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரை உள்ளிட்ட வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் 8 வகையான காய்கறிகளின் விதைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த காய்கறி கிட்டின் விலை 200 ரூபாய் என்ற போதிலும் புதுச்சேரி தோட்டக்கலைத்துறை, இதை முற்றிலும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. புதுச்சேரியில் செயல்படும் 20 தோட்டக்கலை துறை அலுவலகங்களில் ஏதாவது ஓர் அலுவலகத்துக்கு சென்று பொதுமக்கள் இலவசமாக இதைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விதைப்பெட்டியை பெறுவதற்கான விண்ணப்பம் அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. உரிய விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகலை இணைத்து வழங்க வேண்டும். இதன் பின், 200 ரூபாய் மதிப்புள்ள முதல்ரக காய்கறி விதைப்பெட்டிகளை பெற்றுக் கொள்ளலாம்.
அண்மையில் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில், ஆடிப் பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.