சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் இடங்களில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் மீட்பு, நிவாரணப்பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 365 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்களில் முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.