புதுடெல்லி,
பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று பேசுகையில் சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை சுட்டும்படி பேசியதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராகுல் காந்தியிடம் சாதியை கேட்பதில் தவறில்லை என்றும், சாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
“காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அனைவரின் சாதி குறித்து பேசுகிறார்கள். ஒருவரது சாதியைக் கேட்பதன் மூலம், நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் சாதியைக் கேட்கிறார், ஆயுதப்படை வீரர்களின் சாதியை கேட்கிறார், பாரத் ஜோடோ யாத்திரையின் போது மக்களின் சாதியை கேட்கிறார். மற்றவர்களின் சாதியை அவர் கேட்கலாம். ஆனால், அவர் சாதியை யாரும் கேட்கக் கூடாதா. அவரின் சாதியைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. அகிலேஷ் யாதவ் ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கிறார். அவர்கள் என்ன இந்த நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் மேலானவர்களா?”.
வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் வன்முறையைப் பரப்புகிறது. மக்களைப் பிளவுபடுத்தும் காங்கிரசின் முயற்சியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை?” இவ்வாறு அவர் கூறினார்.