புதுடெல்லி: பாஜக எம்பி அனுராக் தாக்குரின் உரையை பகிர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.
சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் நேற்று (ஜூலை 30) பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று (ஜூலை 30) மக்களவையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி உண்மையான இந்து அல்ல எனக் கூறி, அவரது சாதி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். ஆனாலும், சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும்” என கூறினார்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக அனுராக் தாக்கூர் பேசிய பேச்சின் ஒரு பகுதி அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவையை நடத்திய ஜகதாம்பிகா பால் அறிவித்தார். எனினும், அனுராக் தாக்கூரின் பேச்சு ஊடகங்களில் பேசுபொருளானது. இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்திக்கு எதிராக அனுராக் தாக்கூர் பேசிய பேச்சின் முழு வீடியோவின் லிங்கை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்துள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் ஜலந்தர் எம்பியுமான சரண்ஜித் சிங் சன்னி, இது தொடர்பான நோட்டீசை மக்களவைச் செயலாளரிடம் அளித்துள்ளார். அவர் தனது நோட்டீஸில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்பி கூறிய “பல ஆட்சேபகரமான கருத்துகள்” மக்களவைத் தலைவரால் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பகுதிகள் அடங்கிய முழு வீடியோவின் லிங்க்கை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.