சென்னை: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே நடந்த மிகப்பெரிய நிலச்சரிவில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் கேரள அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும். இத்துயர்மிகு நேரத்தில், நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு இருக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வருத்தம் தருகிறது. மீட்பு நடவடிக்கைகளில் உதவ தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வயநாட்டில் நிலச்சரிவின் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விலைமதிக்க முடியாத உயிர்கள் பிரிந்திருப்பது சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்துகிறது.
பாமக தலைவர் அன்புமணி: நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்பதும் பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் புதைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உயிர்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் மாநில அரசுக்கு, மத்திய அரசு உரிய உதவிகளை செய்யவேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால் நாடே மிகுந்த சோகத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிலச்சரிவில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மக்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இதே போன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி, மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.கே.சசிகலா, முன்னாள் எம்பி சரத்குமார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.