வயநாட்டில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத நிலச்சரிவுக்கு வைக்கப்படும் முதன்மையான காரணம் என்பது காலநிலை மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நிகழக் காரணமான வேர்களை அறிந்து, அதற்கேற்ப அரசு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் உணர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. இதனை உறுதிப்படுத்த நிறைய தரவுகளும் இருக்கின்றன.
எச்சரித்த இஸ்ரோ ஆய்வறிக்கை: இஸ்ரோ கடந்த ஆண்டு வெளியிட்ட நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடங்கிய வரைபடத்தில், “இந்தியாவில் உள்ள 30 நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் 10 கேரளாவில் உள்ளன. 30 இடங்களில் கேரளாவின் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைப் பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, அதாவது தமிழகம், கேரள, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப்பாகக் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் மக்கள் தொகை அடர்த்தியால் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள பகுதியாக அதை மாற்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ப்ரிங்கர் என்ற மற்றொரு சூழலியல் சார்ந்த ஆய்விதழில், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் மிக அதிகமாக நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2022-ல் வெளியான மற்றுமொரு ஆய்வறிக்கையில், வயநாட்டில் 1950 முதல் 2018 வரை வனப்பகுதி அழிப்பு 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கே தோட்டப் பயிர்கள் நடவு 1800 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கின்றது.
இவ்வாறாக நாம் இங்கே சாட்சிக்கு எடுத்துக் கொண்ட சில புள்ளிவிவரங்கள் அனைத்துமே காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்ற நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடகாவின் வனப்பரப்பு 37.4%. இதுவே அதிகபட்சம். இதனையடுத்து மகாராஷ்டிரா 25.9%, கேரளா 17%, தமிழகம் 13.6%, குஜராத் 3.9%, கோவா 2 சதவீதம் வனப்பரப்பை மேற்குத் தொட்ரச்சி மலையில் கொண்டுள்ளது. இந்நிலையில், 1920-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக அதிகபட்சமாக 62.7 சதவீதம் வனப்பரப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாறிப்போன பருவமழைப் பொழிவு: நாட்டிலேயே தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. அங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஆண்டு சராசரியாக 3,107 மில்லி மீட்டர் மழை பதிவாகிறது. அதாவது கேரளாவுக்கான 75% மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பரில் பெய்துவிடுகிறது. ஆனால், அண்மைக்காலமாக மாறிவரும் பருவமழை போக்கு எப்படி இத்தகைய இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இது குறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி அமைப்பான ஸ்கைமெட் வெதர் (Skymet Weather) நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவட் கூறுகையில், “பருவமழையின் போக்கு தற்போது வெகுவாக மாற்றம் கண்டுள்ளது. முன்பெல்லாம் பருவமழையின்போது ஒரு சீரான மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பருவமழைக்கு முந்தைய மழையின் தன்மையோடு இடி மின்னலோடு கூடிய கனமழை பருவமழையின்போது பெய்கிறது.
கேரளாவில் பல காலமாகவே பருவமழைக்கான உரித்தான தன்மையோடு மழை பெய்வதில்லை. அதேபோல் பலத்த மழை இருந்தபோதிலும், இதுவரை அதன் சராசரி மழைப்பொழிவை இன்னும் மிஞ்சவில்லை. மேலும், காற்று மற்றும் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், ஈரப்பதம் கடுமையாக அதிகரித்துள்ளது. அரபிக் கடல் வேகமாக வெப்பமடைந்து, வளிமண்டலத்தில் ஈரப்பதத்தை செலுத்தி, நிலையற்றதாக ஆக்குகிறது. இந்த காரணிகள் அனைத்தும் புவி வெப்பமடைதலுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறது. உலகளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பம் 90%-க்கும் மேற்பட்டது கடலால் உறிஞ்சப்படுகிறது. இது கடல் வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் வேகமான வெப்பநிலை அதிகரிப்பு கடல் வெப்ப நிலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இது பருவமழை காலத்தில் மத்திய இந்தியத் துணைக் கண்டத்தில் மழை குறைவதையும், தெற்கு துணைக் கண்டத்தில் மழையை அதிகரிக்கவும் செய்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் ஜூன் 1 முதல் ஜூலை 30 வரையிலான காலகட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 1,283.5 மில்லிமீட்டர். ஆனால் இப்போது பெய்துள்ளது 1,222.5 மில்லி மீட்டர். இது -5% குறைவு. நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து +/-19% இயல்பான மழைப்பொழிவு என்றே கருதப்படுகிறது.
காலநிலை மாற்றம் மோசமடைய வன அழிப்பு, அசுர வளர்ச்சி காணும் நகரமயமாக்கல், திட்டமிடாத வளர்ச்சி ஆகியன இந்தியாவின் பங்களிப்பாக இருக்கிறது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்ப்டுத்தப்படுவதில்லை. அங்கே சாலை அமைப்பது தொடங்கி அனைத்து கட்டுமானங்களிலும் அறிவியல் அனுகுமுறை இல்லை.
இமயமலைப் பகுதியைப் பொருத்த நீர்மின் திட்டங்களின் வீச்சு கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் புவியியல் தன்மைக்கு ஏற்ப அப்பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை கொள்கை வகுப்பாளர்கள் கையாள வேண்டும்.
வயநாடு முதல் எத்தியோப்பியா வரை: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி கனமழை பொழிந்தது. இதையடுத்து, அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது. மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் நிலச்சரிவுகள் அங்கு சர்வ சாதாரணமாக நிகழ்ந்துவிடுகின்றன.
ஆப்பிரிக்காவின் கொம்பு (Greater Horn of Africa) என்றழைக்கப்படும் பிராந்தியத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட வனங்கள் அழிப்பு தான் மிக முக்கியக் காரணம் என்று பல சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உண்மையில், வயநாடு மட்டுமல்ல, எத்தியோப்பியாவில் நிலச்சரிவு ஏற்படுகிறது என்றால் சுரண்டல்கள் அதன் பின்னால் இருக்கத்தான் செய்கின்றன என்ற உலகளாவிய உண்மை இருக்கிறது.
தோட்டப்பயிர் விளைவு: காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறும்போது, “கேரளாவில் தொடர் கனமழை காரணமாக மணல் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது. மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும்போது தெவிட்டு மண்ணாகிக் கரைந்து உருண்டோடிவிடும். இப்படியிருக்க, பாரம்பரிய காட்டு மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மணலை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் மாதிரியான தோட்ட மரங்களின் வேர்களால் அவ்வளவாக மணலை இறுக பற்றிக்கொள்ள முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் கூறும்போது, “கேரள மாநிலத்தில் உள்ள சரிபாதி குன்றுகள் மற்றும் மலைகளினால் ஆனது. இத்தகைய பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத்தகைய சூழலில், ‘சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அப்பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும். இதுதவிர பருவநிலை மாற்றமும், மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இத்தகைய அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை” என்று கூறினார்.
தற்கால இயற்கைப் பேரிடர்களை தவிர்க்க, சமாளிக்க விரிவான, ஒருங்கிணைந்த, அறிவியல்பூர்வமான திட்டங்களும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் அவசியமாகிறது என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறாக காலநிலை மாற்றத்தைத் தூண்டுவதில் மனிதப் பங்களிப்பு முழுக்க முழுக்க இருக்கையில் பழி மொத்தத்தையும் காலநிலை மாற்றம் என்று சொல்லிக் கடந்து சென்றுவிட முடியுமா?
| வாசிக்க > வயநாடு நிலச்சரிவு: இதுவரை 270 உடல்கள் மீட்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் |