புதுடெல்லி: கனமழை குறித்து கேரளாவுக்கு ஜூலை 23-ம் தேதியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது என்று வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வானிலை குறித்து 7 நாட்களுக்கு முன்பே கணிக்கும் எச்சரிக்கை அமைப்பு மத்திய அரசு சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. ஏழு நாட்களுக்கு முன்னரே வானிலையை கணிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற உலகின் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை மத்திய அரசு கடந்த 23-ம் தேதியே வழங்கியது. எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டன. நேற்று கூடுதலாக மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டன.
மீண்டும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. ஜூலை 26-ம் தேதி அனுப்பப்பட்ட செய்தியில், 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னரே எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. ஆனால், இந்திய அரசின் முன்னெச்சரிக்கை அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்.
கேரள மக்களுடனும் அங்குள்ள அரசுடனும் நாம் நிற்க வேண்டிய நேரம் இது. நரேந்திர மோடி அரசு, கேரள மக்களுடனும் அங்குள்ள அரசாங்கத்துடனும் பாறை போல் நிற்கும் என்பதை நான் சபையில் உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று அமித் ஷா தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியானதில் இருந்து மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயுதப் படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் பல குழுக்கள் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு மோப்ப நாய் படையும் நிறுத்தப்பட்டுள்ளது. நிலங்களுக்கு கீழே புதைந்துள்ள மனிதர்களைக் கண்டறிய இது உதவும்” என தெரிவித்தார். தற்போதைய நிலவரம்: வயநாடு நிலச்சரிவு பலி 185 ஆக அதிகரிப்பு: தொடரும் தீவிர மீட்புப் பணிகள் – முழு விவரம்