கோவை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோவை மாநகராட்சி வயநாடு மீட்புப் பணிக்கு உபகரணங்களை அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீட்பு பணிக்கு பயன்படுத்துவதற்காக கோவை மாநகராட்சி சார்பில் உபகரணங்கள் இன்று அதிகாலை (புதன்கிழமை) கோவையில் இருந்து வயநாட்டுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. இதில், மண் அகற்றும் ஹிட்டாச்சி வாகனங்கள் 5 , மீட்கப்பட்ட சடலங்களை வைப்பதற்கான 20 குளிரூட்டும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் குழுவினர் இணைந்து இவற்றை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மீட்புப் பணிக்காக மேற்கண்ட உபகரணங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மேற்கண்ட பொருட்கள் மற்றும் வாகனங்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.