2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி அடைபவர்களைத் தாண்டி, போட்டியாளர்களைப் பற்றிய பல்வேறு சுவாரசிய செய்திகளும் வலம் வருகின்றன. அந்த வகையில், ஏழு மாத கர்ப்பிணி நடா ஹஃபிஸ் (Nada Hafez) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஃபென்சிங் (வாள் வீச்சு) வீரர், நடா ஹஃபிஸ். இவர் ஜுலை 30-ம் தேதி வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்றார். அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கி என்ற வீரரை 15-13 என்ற கணக்கில் 32-வது சுற்றில் தோற்கடித்தார். தொடர்ந்து, தென்கொரியாவின் ஜியோன் ஹயோங் என்ற வீரரிடம் 15-07 என்ற கணக்கில் 16-வது சுற்றில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடா ஹஃபிஸ். அந்தப் பதில், “அரங்கத்தில் இரண்டு வீரர்கள்தான் விளையாடுவார்கள். ஆனால், இந்தப் போட்டியில் மூன்று வீரர்கள் விளையாடி உள்ளோம். நான், எதிரணி போட்டியாளர் மற்றும் இந்த உலகத்துக்கு வர காத்திருக்கும் என் குழந்தை.
போட்டியில் பங்கேற்பதில் உடல் ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் எனக்கும் என் குழந்தைக்கும் சவால்கள் இருந்தன. கர்ப்பகாலம் என்பது ரோலர்கோஸ்டர் போல கடினமானது. அந்த நேரத்தில், என் வாழ்க்கையையும் விளையாட்டையும் சமநிலையில் வைத்திருக்கப் போராடுவது கடினமானது என்றாலும், அது மதிப்புக்குரியது.
நான் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால், இந்த ஒலிம்பிக் எனக்கு வித்தியாசமானது. காரணம், இம்முறை ஒரு குட்டி ஒலிம்பியனை (ஒலிம்பிக் விளையாட்டு வீரர்) சுமக்கிறேன். என் கணவர் இப்ராஹிம் இஹாப் மற்றும் என் குடும்பத்தினரின் நம்பிக்கையால்தான் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தது” என்று நடா ஹஃபிஸ் பதிவிட்டுள்ளார்.
நடா ஹஃபிஸின் அறிவிப்புக்கு உலகம் முழுவதிலுமுள்ள நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 26 வயதாகும் நடா ஹஃபிஸ் (Nada Hafez) ஒரு ஜிம்னாஸ்டிக் வீரரும்கூட. வாள் வீச்சு, ஜிம்னாஸ்டிக் என விளையாட்டுகளில் கவனம் செலுத்தினாலும், அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர்.
– ம. பொன்நந்தினி