வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் – சின்னு. கர்ப்பமாக இருந்த சின்னு கடந்த 27-ம் தேதி இரவு பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் விடியற்காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை 7:15 மணியளவில் சின்னுவின் கணவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் வெளியே சென்றதாக தெரிகிறது.
சின்னு சாப்பிடும்போது, முன்பின் தெரியாத பெண் ஒருவர், அவரிடம் சென்று பேச்சுக்கொடுத்து குழந்தையை பார்த்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். சின்னுவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு வந்த நேரத்தில் குழந்தையுடன் அந்தப் பெண் மாயமானதாகச் சொல்லப்படுகிறது. பதறிப்போன சின்னு தனது குழந்தை கடத்தப்பட்டதாக வார்டு நர்ஸிடம் கூறியிருக்கிறார்.
தகவலறிந்ததும், வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் பை ஒன்றை கையில் சுமந்தபடி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்வது பதிவாகியிருக்கிறது. அந்த பெண் கொண்டு சென்ற பையில்தான் குழந்தை இருக்கும் என நம்பப்படுகிறது.
எனவே, அந்த பெண்ணை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, `குழந்தைகள் நல வார்டில் குழந்தைகளை கண்காணிக்க, பிரச்னைகளை தவிர்க்க ஆர்.எஃப்.ஐ.டி என்ற அடையாள டேக் குழந்தைகளின் கைகளில் கட்டப்படும். வார்டில் இருந்து குழந்தைகள் வெளியே சென்றால் எச்சரிக்கை சத்தம் ஒலிக்கும். ஆனால், பெற்றோரே குழந்தையின் கையில் இருந்த டேகை கழற்றி வைத்திருக்கின்றனர். அதனால்தான் குழந்தையை தூக்கிச்செல்லும் போது சத்தம் ஒலிக்கவில்லை. ஆனாலும், பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது’ என்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.