கமலின் சகோதரர் சாருஹாசன், தற்போது மகள் சுஹாசினியின் வீட்டில்தான் இருக்கிறார். கூடவே அவர் மனைவியும் இருக்கிறார்.
93 வயதாகும் சாருஹாசன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று மதியம்போல் அவருக்கு உடல் தளர்வாகவும் சோர்வுற்றும் இருந்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் எதுவும் பிரச்னையாக இல்லை என்றும் நாலைந்து நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
சாருஹாசன் கலகலப்பாகவும் வழக்கம் போல் ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுஹாசினி அருகிருந்து பார்த்துக் கொள்கிறார். படப்பிடிப்பில் இருப்பதால் கமல்ஹாசன் போனில் அண்ணனிடம் பேசியிருக்கிறார்.
சுஹாசினி, அப்பா சாருஹாசனோடு இருக்கும் படத்தை தனது வலைதளப் பக்கத்தில் அப்பாவும் நானும் மருத்துவமனையில் இருக்கின்றோம்.
அப்பா பழைய உற்சாகத்திற்கு திரும்புகிறார். குறையொன்றுமில்லை என எழுதியிருக்கிறார். வயது மூப்பின் காரணமாகவே அவருக்கு உடல் நிலை அவ்வப்போது தளர்வடைகிறது என்று அவரது உதவியாளர்கள் சொல்கிறார்கள்.
கடைசியாக மோகன் நடித்து வெளிவந்த ‘ஹரா’ படத்தில் ஒரு துணைப்பாத்திரத்தில் சாருஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞரான அவர், கன்னடப் படமான ‘தபரன கதே’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
சாருஹாசன் விரைவில் நலம் பெறட்டும்!