மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் மறைமுகமாக `தனது சாதி தெரியாதவர், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று கூறியதும், இவ்வாறு பேசியதற்காக அவரைப் பிரதமர் மோடி பாராட்டியதோடு, அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பேச்சு என்று ப்ரமோட் செய்திருப்பதும் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.
இவ்வாறிருக்க, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை என எமோஷனலாகப் பேசியிருக்கிறார். முன்னதாக, பா.ஜ.க எம்.பி கன்ஷ்யாம் திவாரி மாநிலங்களவையில் இன்று பேசுகையில், “கார்கேவின் மொத்த குடும்பமும் அரசியலில் இருக்கிறது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.பி-யின் இத்தகைய பேச்சு தொடர்பாக சபாநாயகர் ஜெக்தீப் தன்கரிடம் முறையிட்ட கார்கே, “ ‘பரிவர்வாத்’ தொடர்பாக அவர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதைப் பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
மேலும், காங்கிரஸில் தனது அரசியல் பயணங்களை விவரித்த கார்கே, தனது குடும்பத்தில் தான் தான் முதல் தலைமுறை அரசியல்வாதி என்று கூறினார். தொடர்ந்து பேசிய கார்கே, ஒருகட்டத்தில் தனது தந்தை 85 வயதில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அப்போது, சபாநாயகர் ஜெக்தீப் தன்கர் கார்கேவிடம், உங்களுடைய தந்தையை விடவும் நீண்ட காலம் வாழுங்கள் என்றார். அதற்கு கார்கே, “இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை” என்று கூறினார். பின்னர் ஜெக்தீப் தன்கர், பா.ஜ.க எம்.பி கூறிய கருத்துகளை ஆராய்வதாகவும், கார்கேவை புண்படுத்தும் வார்த்தைகள் எந்த வார்த்தையும் பதிவில் இருக்காது என்றும் உறுதியளித்தார்.