கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் சூரல் மலை, மேப்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வருகின்றன. 4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேரிடரில் சிக்கிய உயிரிழந்த 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளச் சூழலில் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதுவரை 191 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப்பணியின்போது அடையாளம் காணமுடியாத நிலையில் இருக்கும் உடல்களைப் பார்த்து மீட்புப்படையினரே கண்ணீர் வடிக்கும் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. மேலும், அப்பகுதியில் இருக்கும் 3000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் வழங்கி வருகின்றனர்.
மீட்புப் படையினருடன் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கிய மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் (DYFI) சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில், ‘கருடன்’ படத்தில் வில்லான நடித்திருந்த உன்னி முகுந்தன், மஞ்சு வாரியர், ஷான் நிகம் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பலரும் மீட்புப் பணிக்கும், நிவாரணப் பணிக்கும் குழுவாகக் களத்தில் இறங்கிச் செயல்பட தங்கள் சமூகவலைத்தளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர். மம்மூட்டி, மோகன் லால், பிரித்திவிராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நிவாரண பணிகளுக்கு ரசிகர்கள் அமைப்பு மூலம் உதவி வருகின்றனர்.
இந்த பேரிடர் நேரத்தில் மீட்புப் பணிகள் தவிர்த்துப் பிற காரணங்களுக்காக வயநாட்டுக்கு வர வேண்டாம் எனக் கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.