கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்க உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளனர்.
முன்னதாக இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார்? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் இல்லாத சூழ்நிலையில் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் அபாரமாக பேட்டிங் செய்து இந்தியா பைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து டி20 உலகக்கோப்பையில் அசத்திய ரிஷப் பண்ட் பழைய பார்முக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் – ராகுல் ஆகிய இருவருமே மேட்ச் வின்னர்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். எனவே அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது தமக்கு மிகப்பெரிய சவால் என்று ரோகித் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:-
“அது மிகவும் கடினமான முடிவு. இருவருமே தரமான வீரர்கள். அவர்களுடைய திறமை என்ன என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் இருவருமே தங்களுடைய வழியில் மேட்ச் வின்னர்கள். அவர்கள் கடந்த காலங்களில் நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர். எனவே அது போன்ற தரத்தை கொண்ட வீரர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதல்ல. எப்போதுமே இந்திய அணியை தேர்ந்தெடுக்கும்போது இது போன்ற பிரச்சனை இருப்பது நல்லது. அப்போதுதான் உங்களுக்கு அணியில் எவ்வளவு தரம் இருக்கிறது என்பது தெரியும். நான் கேப்டனாக இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.