“என் தந்தையை இழந்தபோது அடைந்த அதே துக்கம்…” – வயநாட்டில் ராகுல் காந்தி உருக்கம்

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ, அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் மலைப் பிரதேசங்கள் நிறைந்த வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 295 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிப்பு நிறைந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் நின்று வெற்றிபெற்றவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று (ஆகஸ்ட் 1) வயநாடு வந்தார். நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், அங்கு நிலைமையை ஆய்வு செய்தனர். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.



மேலும், மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேப்பாடி, சூரல்மலா, முண்டக்கை என நிலச்சரிவு உண்டான இடங்களில் மீட்புப்பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்தத் துயரமான நேரத்தில் மக்களுடம் இருப்பது அவசியம். ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “வயநாட்டின் சோகக் காட்சிகள் என் இதயத்தில் வேதனையை உண்டாக்குகிறது. இந்த கடினமான காலங்களில் நானும் பிரியங்காவும் வயநாடு மக்களுடன் நிற்போம். நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம். யுடிஎப் கூட்டணி அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளது. மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒரு விரிவான செயல் திட்டம் உடனடியாக தேவை” என்று ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.