புதுடெல்லி: டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில், நீர் தேங்கிய கால்வாயில் மூழ்கி ஒரு பெண்மணியும் அவரது குழந்தையும் உயிரிழந்தனர். குருகிராமில், கனமழைக்கு பின்னர், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பத்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் லக்னோவுக்கும் திருப்பிவிடப்பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர்மழை காரணமாக தலைநகர் டெல்லியில் வியாழக்கிழமை பள்ளிகள் இயங்காது என டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்திருந்தார்.
108 மி.மீ மழை: இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் சுமார் 108 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் டெல்லியில் ஒருநாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.
தேசிய தலைநகர் டெல்லியின் அதிகாரபூர்வ வானிலை ஆய்வுமையமான சஃப்தர்ஜூங் புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு இடையில் பதிவான மழை அளவினை பதிவு செய்துள்ளது. டெல்லியில் நேற்று மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையில் டெல்லியில் 79.2 மி.மீ., மழையும், மயூர் விஹார் பகுதியில் 119 மி.மீ., பூசா பகுதியில் 66.5 மி.மீ., டெல்லி பல்கலை., பகுதியில் 77.5 மி.மீ., பாலம் கண்காணிப்பகம் பகுதியில் 43.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு: தொடர் கனமழை காரணமாக தேசிய தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. டெல்லி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காசியாபாத் பகுதிகளுகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலியான பழைய ராஜேந்திர் நகர் பகுதியில் கால் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கி நிக்கிறது. மத்திய டெல்லியின் கன்னோட் பிளேஸ் பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மக்கள் வெளியே வரவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் தலைநகர் டெல்லியை கவலைக்குரிய பகுதி என்ற பட்டியலில் சேர்த்திருக்கிறது. இதனால் மக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மக்கள் வீடுகளில் கதவுகள், ஜன்னல்களை மூடிக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.