வயநாடு: வயநாடு பெருந்துயரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தத் துயரத்தின் உண்மையான சோகத்தை வலியுடன் பகிர்கிறார் அரசு மருத்துவர் ஒருவர். உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட அப்பெண் மருத்துவர், தான் இதுவரை காணாத காட்சிகளைக் கண்டிருக்கிறார்.
தனது வாழ்வில் அடுத்தமுறை நிகழக்கூடாது என நினைக்கும் அத்துயர்மிகு வலிகள் குறித்து அம்மருத்துவர் கூறியது: “நான் உடற்கூராய்வு செய்வதற்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். ஆனால், இப்போது நடப்பது போன்ற ஒன்றுக்கு எதுவும் என்னை எப்போதும் தயார்படுத்த முடியாது. உடல்கள் கொடுமையாக காயம்பட்டுள்ளன. என்னால் இரண்டாவது முறை அவற்றைப் பார்க்க முடியாது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியான ஒன்றைப் பார்த்ததே இல்லை. என்னுடைய பணி அனுபவத்தில் பல உடல்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவை மிகவும் வித்தியாசமானவை. இதன் பாதிப்புகள் மிகவும் கொடுமையானது. ஒருவரை நொறுங்கிப் போகச் செய்துவிடுவது.
நான் முதல் உடலைப் பார்த்தபோது என்னால் இதைச் செய்ய முடியாது என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். அந்த உடல் மிகவும் நசுங்கிப் போய் இருந்தது. இரண்டாவது உடல் ஓர் இரண்டு வயது குழந்தையுடையது. அதைப் பார்த்ததும் என்னால் உடற்கூராய்வை செய்ய முடியாது என்று நான் உறுதியாக இருந்தேன். அங்கிருந்து தப்பித்து, உயிரோடு இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதிக்கு ஓடிப்போக நினைத்தேன். ஆனால் அந்த நாளில் வேறு வழி இருக்கவில்லை. நான் 18 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தேன்.
அங்கே பரிசோதனை நடத்த 8 மேஜைகள் இருந்தன மாலைக்குள் அங்கே பல தடையவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தனர். ஒவ்வொரு மேஜையிலும் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் இருந்தார். இரவு 7.30 மணிக்கு நாங்களால் 53 உடல்களுக்கு பிரிசோதனை செய்ய முடிந்தது. இங்கே நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படியான உடல்களை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததே இல்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூட இதுபோன்ற உடல்களை கையாளுவது சிரமம்” என்று அம்மருத்துவர் தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்கள் குழு முதல் நாளில் இரவு 11.30 மணி வரைக்கு தங்களின் பணிகளைத் தொடர்ந்தனர். அவர்கள் 93 உடல்களுக்கும் மேல் உடற்கூராய்வு செய்திருந்தனர். அந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டது. பல தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்ததால், நடைமுறைகளை முடிப்பதில் தாமதம் இருக்கவில்லை.
இந்தத் தாக்கத்தின் பாதிப்பு மருத்துவர்களை மிகவும் உலுக்கியது, உடைந்து போகச் செய்தது. மருத்துவர்கள் தொடர்ந்து உடல்களின் பாகங்களைக் கையாளுகின்றனர். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உள் உறுப்புகளை சேகரித் துவைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ய அவை சேகரிக்கப்படுகின்றன.
மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வின்றி பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களின் சிதைந்த உடல்களை அறுத்துக்கொண்டே இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மீட்புக் குழுவினர் இப்போது செல்ல முடிந்திருப்பதால், அதிமான உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டை இருக்கும் நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து தங்களின் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், நிலச்சரிவு பாதிப்பில் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைத் துரத்தும் அனுபவத்துக்கு ஆளாகியிருப்பதால் அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தியுள்ளார்.