சென்னை: “அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் கருணாநிதி கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது,” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அதன் விவரம்: பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு