மதுரை: ‘பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது தான். அதை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரம் வரம்பு மீறுவதை ஏற்க முடியாது’ என சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும் போது ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக என் மீது திருச்சி போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், மனுதாரர் பொது இடங்களிலும், சமூக வலை தளங்களிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இனிமேல் பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். அதையேற்று அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் மனுதாரர் மீண்டும் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது மனுதாரருக்கு தெரியாதா?
கருத்து வேறுபாடுகளை நாகரீகமாக எதிர்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது, பணமும் குவிகிறது. யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக மனுதாரர் பதிவிட்டுள்ளார்.
பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதை ஏற்கவும் முடியாது. எனவே, மனுதாரர் இனிமேல் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், அதைசமூக வலை தளங்களில் பதிவிட மாட்டேன் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து சாட்டை துரைமுருகன் தரப்பில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி, கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற உத்தரவிட்டார்.