மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை: டான்டீ நிறுவனம் திட்டவட்டம் @ ஐகோர்ட்

மதுரை: “கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டான்டீ நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை கோரியும், தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரியும், தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கக் கோரியும் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் டான்டீ நிறுவனம் ஏற்று நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பிலும், மாஞ்சோலையை டான்டீ நிறுவனத்துக்கு வழங்க முடியாது என வனத் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டான்டீ நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், “மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதி ஏற்கெனவே புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்படியும் மாஞ்சோலையை டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த முடியாது. இலங்கை தமிழர்களின் மறு குடியேற்றத்திற்காக டான்டீ நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் தொடக்கத்தில் லாபம் ஈட்டினாலும், கடந்த 30 ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. 2022- 2023 ஆண்டுகளில் ரூ.293.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் டான்டீ நிறுவனம் இருப்பதால், மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து நீதிபதிகள், “டான்டீ நிறுவனம் ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை ஏற்று நடத்துமாறு டான்டீ நிறுவனத்தை கட்டாயப்படுத்த முடியாது” என்றனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில், “மாஞ்சோலையிலிருந்து மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “மாஞ்சோலை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரலாம். விரிவான விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.