மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.

கல்லூரியில் 3 உதவி பேராசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:



கொளத்தூரை முன்மாதிரி தொகுதியாக மாற்றி வருகிறோம். இதேபோல, பல தொகுதிகளும் மாற உள்ளன. நான் சுயநலத்துடன் செயல்படுவதாக நினைக்க கூடாது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் எனது தொகுதிகள்தான்.

இந்த ஆட்சியில் இதுவரை 1,921 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ. 6,147 கோடி மதிப்பில் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதேபோல, அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன்.

‘நான் முதல்வன்’ திட்டம் உட்பட அரசு ஏற்படுத்தி தரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சியிலும் மாணவர்கள், இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். . இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்த147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம், பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் கொளத்தூரில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு – மறுவாழ்வு மையம் மற்றும் பகிர்ந்த பணியிடத்துக்கான (Co-working Space) கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

கேரளாவுக்கு ரூ.5 கோடி வழங்கல்: பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறும்போது, வயநாடு நிலச்சரிவு தொடர்பாககேரள முதல்வரிடம் பேசினேன்.தமிழக அரசு சார்பில் அனைத்து வகையிலும் உதவி செய்வதாக கூறியுள்ளோம்.

2 ஐஏஎஸ் அதிகாரிகள்தலைமையில் மருத்துவ குழுஅனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசுசார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்வதாகவும் கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் பினராயிவிஜயனிடம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவனந்தபுரம் சென்று வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.