ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடிக்கத் துவங்கினர். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையை நோக்கி திருப்பினர்.
ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது படகின்மீது தங்கள் ரோந்து படகினை கொண்டு மோதினர். இதில் பலத்த சேதமடைந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் மலைச்சாமி, ராமச்சந்திரன், மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய நான்கு பேரும் கடலில் குதித்து உயிருக்குப் போராடிய நிலையில், தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பியுள்ளனர்.
இதனை கேட்டு அப்பகுதிக்கு வந்த மற்ற மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில், மீனவர்கள் மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய இருவரையும் மீட்டு சிறைபிடித்துச் சென்றனர். மற்ற இரு மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இன்று காலை கடலில் மிதந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கை புங்கடி தீவு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது பற்றிய தகவல் இன்று காலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவரை மீட்டுத்தரக் கோரி துறைமுக பகுதியில் போராட்டம் நடத்தினர்.
பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகு மீது மோதிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதுடன், உயிரிழந்த மீனவரின் உடலை கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் மற்றும் வருவாய்துறை, மீன் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இரு மீனவர்கள் உயிருடன் இருப்பதற்கான போட்டோக்களை காண்பித்தால் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களின் நிலை குறித்து அறிய இந்திய துணை தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் கூறினர். இதையடுத்து வாகன போக்குவரத்தினை அனுமதித்த மீனவர்கள், சாலை ஓரமாக அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.