லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி,

ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் லெபனானில் இருந்து வெளியேற முடியாத இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி லெபனான் இந்திய தூதரகம் சார்பில் இந்திய நாட்டவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லெபனான் இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், ” பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து இந்திய குடிமக்களும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், தங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தங்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்:

தொடர்புக்கு: [email protected] அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128″ என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.