பெய்ரூட்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய குடிமக்கள், லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு, லெபனானில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் ஒரு காரணத்துக்காக லெபனானில் தங்கியிருப்பவர்கள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள [email protected] என்ற இமெயில் முகவரியும், +96176860128 என்ற அவசர தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெய்ரூட் புறநகர் பகுதியில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பு சார்பில் கட்டளைகளைப் பிறப்பிக்கும் ராணுவ உயரதிகாரியான ஃபாட் சுக்ர், தனது வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகரில் தங்கி இருந்தபோது அந்த இடம் ஏவுகணை தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என தெரிவித்துள்ள ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவின் தளபதி முகம்மது டெய்ஃப், கடந்த மாதம் தாங்கள் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று (ஆகஸ்ட் 1) உறுதிப்படுத்தி உள்ளது. இதனால், இஸ்ரேல் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.