வயநாடு நிலச்சரிவில் 1,500 பேர் பத்திரமாக மீட்பு: தாராளமாக நிதி வழங்க பினராயி விஜயன் வேண்டுகோள்

வயநாடு: பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வயநாட்டில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உட்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

நிலச்சரிவில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணிகள் உட்பட 8,017 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணத்துக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண பணிகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் தாராளமாக வழங்கவேண்டும். பணமாக அளிப்பவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பொருளாக அளிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயன்படுத்திய பழைய பொருட்களை தரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.