மாஸ்கோ,
கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், தொடர்ந்து மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தேடுதல் மற்றும் மீட்பு பணியை சிக்கலாக்கி உள்ளது.
கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பலியான, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ச்சியாக பலர் பலியான சோக சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
கேரள நிலச்சரிவு சோகத்திற்கான மிக உண்மையான இரங்கல்களை ஏற்று கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு இரக்கம் மற்றும் ஆதரவான வார்த்தைகளை தெரிவிக்கவும் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.