வயநாடு,
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களைவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
“என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். இது தேசிய பேரிடர்தான். மக்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன். மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவை குறித்து மக்கள் என்னிடம் பேசினர்.
வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது; இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.