கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் வீழ்ந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்தத் தலைமையை தெரிவு செய்வது சரியான மற்றும் நியாயமான முடிவாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,
இந்த ஆண்டு முதலீட்டுச் சபைக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் கொடுக்கப்பட்ட முதலீட்டு இலக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஆகும். இதுவரை 800 மில்லியன் டொலர் முதலீடுகள் நாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் டொலர் இலக்கை நோக்கி செல்ல முடியும் என்று நாம் நம்புகிறோம்.
2024ஆம் ஆண்டிற்கு திருகோணமலை, பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 35 திட்டங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் தொடங்குவதால் முதலீடுகள் ஓரளவு குறையலாம் என நம்புகிறோம். ஆனால் இது ஒரு சாதாரண நிலை என்பதைக் கூற வேண்டும்.
அத்துடன், புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், பொருளாதார ஆணைக்குழு ஊடாக முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அனைத்து முடிவுகளும் அதன் உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும். மேலும், மிகக் குறுகிய காலத்தில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் வேலைத்திட்டமும் உள்ளது.
நாம் புதிதாக நிறுவிய சர்வதேச வர்த்தக அலுவலகம் (Office of International Trade) தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. வரியின்றி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மேலும், போர்ட்சிட்டி திட்டத்தின் 80% கட்டுமானப் பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன. தற்போது அதற்கு குடிநீர் மற்றும் மின்சார விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் வர்த்தக நடவடிக்கைகளை தொடங்குவதற்கு வர்த்தக மூலோபாய முக்கியத்துவம் சட்டத்தின் கீழ் (Business strategic Importance) அனுமதி பெற வேண்டும்.
அதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்கள் திட்ட அறிக்கையை போர்ட்சிட்டி ஆணகைகுழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை, நாங்கள் இருபதுக்கும் மேற்பட்ட BSI களை அமைச்சரவைக்கு வழங்கியுள்ளோம். சுமார் ஐம்பது BSI அமைச்சரவைக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும் தற்போது அரசின் பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது ஒரு அதிசயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிரீஸ், லெபனான் உள்ளிட்ட பிற நாடுகளைப் பார்க்கும் போது உலகில் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்ததில்லை என்பது தெளிவாகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீழ்ந்த நாட்டை மீட்க யாரும் முன்வரவில்லை. அதன்போது, அறிவு, அனுபவம் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படையில் கீழ் வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரம் என்பதால், அவருக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தோம்.
அந்தத் தெரிவு சரியானது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்வது இந்த தருணத்தில் சரியான முடிவு என்பதை குறிப்பிட வேண்டும்.