வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்துக்குள் மீட்பு: 7 பேர் கைது

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல் நடந்த 24 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னு. கர்ப்பிணியாக இருந்த சின்னு, பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் (ஜூலை) 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வார்டில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.

இதற்கிடையில், குழந்தைகள் நல வார்டில் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் கடந்த 31-ம் தேதி காலை சின்னுவின் குழந்தையை கடத்தியுள்ளார். இது குறித்து, தகவலின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வேலூர் கிராமிய காவல் ஆய்வாளர் சுபா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.



அதில், நீல நிற புடவை அணிந்த பெண் ஒருவர் பள்ளி புத்தகப்பை அணிந்திருந்த சிறுவனுடன் வார்டில் நடமாடியுள்ளார். காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னுவிடம் இருந்து குழந்தையை வாங்கி கையில் வைத்து அந்த கொஞ்சியுள்ளார். சின்னுவின் கவனம் திசை திரும்பிய நேரத்தில் அந்த பெண் குழந்தையுடன் அவசர அவசராக வெளியே செல்கிறார். வெளியே செல்லும்போது கையில் கட்டைப் பையுடன் செல்கிறார். அந்த பையை சரிபார்த்தபடி செல்கிறார். அவர் வைத்திருந்த கட்டைப் பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது உறுதியானது.

இதையடுத்து, வேலூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இடையன்சாத்து வரை அந்த பெண் செல்வது தெரியவந்தது. அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பின்னர், குழந்தையை கடத்திய அந்த பெண்ணை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்திரவிட்டார். தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியவர் வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த வைஜெயந்தி மாலா என்று தெரியவந்தது. அவரை ஆய்வாளர் சுபா தலைமையிலான காவலர்கள் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, பெங்களூருவைச் சேர்ந்தவர்களுக்காக குழந்தையை கடத்தியதாக கூறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் பெங்களூரு விரைந்தனர். அதேநேரம், குழந்தையுடன் சென்ற காரின் பதிவெண்ணை கண்டறிந்து, அந்த கார் எந்தெந்த சுங்கச்சாவடிகளை கடந்து சென்றது என்ற விவரங்களையும் சேகரித்து பெங்களூரு சென்ற தனிப்படைக்கு கொடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கடத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்பல்லாபூரில் தனிப்படை காவலர்கள் இன்று (ஆக.1) காலை 8 மணியளவில் மீட்டனர். குழந்தையை கடத்தியதாக வேலூர் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா (40), அம்மு என்ற ஞானமணி (44), அவரது கணவர் செல்லதுரை (55), ஞானமணியின் அக்காள் மகனும் கார் ஓட்டுநருமான பிரவீன் செல்வன் (26), கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரை சேர்ந்த லீலா என்ற லீலாவதி (44), மற்றும் அஜய்குமார் (37), அவரது மனைவி ஐஸ்வர்யா (33) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தையை மீட்டதுடன் பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை செய்த காவலர்கள், வேலூர் அழைத்துச் செல்வதற்கான உடல் நிலையில் அந்த குழந்தை உள்ளதா என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து காவல் துறை ஜீப்பில் எடுத்துவரப்பட்ட குழந்தையை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவிந்தன் – சின்னு தம்பதியிடம் இன்று மாலை ஒப்படைத்தனர். பின்னர், அந்த குழந்தையை இன்குபேக்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை கடத்தல் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “பெங்களூரு சிக்கபல்லாபூரைச் சேர்ந்த அஜய்குமார், ஐஸ்வர்யா தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், பிறந்த குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளனர். இதற்காக, தனது வீட்டின் உரிமையாளர் லீலா என்ற லீலாவதியிடம் எங்காவதும் குழந்தையை வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.7 லட்சம் தொகையை கொடுத்துள்ளனர். இதையடுத்து, தனக்கு தெரிந்த ஞானமணி, செல்லதுரையிடம் எங்காவது குழந்தையை வாங்கித் தரும்படி லீலாவதி கேட்டுள்ளார். ரூ.7 லட்சம் தொகையில் இருவரும் பங்கிட்டுக்கொண்டு்ள்ளனர்.

ஆனால், மாதங்கள் கடந்த நிலையில் குழந்தையை கொடுக்காததால் காவல்துறையில் புகார் அளித்துவிடுவேன் என்று அஜய்குமார், ஐஸ்வர்யா தம்பதியினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த லீலா மற்றும் ஞானமணி, செல்லதுரை ஆகியோர் வைஜெயந்தி மாலாவை தொடர்புகொண்டு குழந்தை தொடர்பாக கூறியுள்ளனர். அவரும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சின்னுவின் குழந்தையை கட்டைப் பையில் கடத்தியுள்ளார். அந்த குழந்தையை காரில் தயாராக இருந்த ஞானமணி, செல்லதுரையிடம் கொடுத்துள்ளார். அந்த காரை ஞானமணியின் அக்காள் மகன் பிரவீன் செல்வன் ஓட்டியுள்ளார். குழந்தையுடன் பெங்களூரு சிக்பல்லாபூர் சென்றுள்ளனர்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.