Delhi Rains: புதிய நாடாளுமன்றத்தில் ஒழுகிய மழைநீர்; பக்கெட்டில் பிடித்த ஊழியர்கள்; காங்., விமர்சனம்!

பா.ஜ.க அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் 971 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்து, கடந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாத நாடாளுமன்றத் திறப்பு விழாவை, செங்கோல் வைத்து பிரமாண்ட நிகழ்வாக அரங்கேற்றினார் பிரதமர் மோடி. இந்த நிலையில், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. டெல்லியின் முக்கியப் பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது பெய்துவரும் பெருமழைக்கு நாடாளுமன்றக் கட்டடமும் விதிவிலக்கல்ல என்ற ரீதியில், கட்டடம் கட்டப்பட்ட ஒரு வருடத்திலேயே மழை நீர் புகுந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22-ம் தேதி தொடங்கி நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் இந்திய குடியரசுத் தலைவர் நுழையும் பாதையில், நாடாளுமன்ற லாபிக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் உட்பட சிறப்புக் குழுவை அமைக்க முன்மொழிகிறேன். அந்தக் குழு கட்டடத்தை முழுமையாக ஆய்வு செய்து, கசிவுக்கான காரணங்கள், வடிவமைப்பு, பொருள்களை மதிப்பீடு செய்து, தேவையான பழுதுபார்ப்புகளைப் பரிந்துரைக்க வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்படும் தகவல்களை பகிரங்கமாக பகிர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மழை நீர் கசிவதை நாடாளுமன்ற ஊழியர்கள் பக்கெட் வைத்து பிடிக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்தப் புதிய நாடாளுமன்றத்தை விட பழைய நாடாளுமன்றம் சிறப்பாக இருந்தது. முன்னாள் எம்.பி-க்கள் கூட அதை அறிந்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை ஏன் பழைய நாடாளுமன்றத்தில் செயல்படக் கூடாது? மேலும், பா.ஜ.க ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டுமானத்திலிருந்தும் தண்ணீர் சொட்டுவது, அவர்களின் நிர்வாகம் குறித்து மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.