Doctor Vikatan: நான் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளேன். மேலும், கர்ப்பமாக உள்ளேன். கீமோதெரபி கொடுத்து வருகிறார்கள். இதை எந்த வாரம் வரையில் கொடுக்கலாம்… இந்நிலையில் நான் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
-seema, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா
மார்பகப் புற்றுநோயுடன் கர்ப்பத்தையும் சேர்த்து எதிர்கொள்வது என்பது யாருக்குமே மிகுந்த சவாலான, சிரமமான விஷயம்தான். நம்பிக்கையை இழக்காமல், தைரியமாக இரண்டையும் எதிர்கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்ற தகவல் இல்லை. உங்களுக்குச் சிகிச்சை கொடுக்கும் மருத்துவக் குழுவில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மூவரும் அவசியம் இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். கர்ப்பத்தின் இடையில் அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கீமோதெரபி சிகிச்சை கொடுக்க மாட்டார்கள்.
அதேபோல, எண்டோக்ரைன் தெரபி (Endocrine Therapy) மற்றும் ரேடியேஷன் தெரபி (Radiation Therapy) போன்றவையும் கர்ப்பத்தின் எந்த மாதத்திலும் செய்வதற்குப் பரிந்துரைக்கப்படாது. அது மட்டுமன்றி, அந்தச் சிகிச்சைகள், பிரசவமான சில வாரங்கள் வரையிலும்கூட அனுமதிக்கப்படாது.
உங்களுக்கு ஒவ்வொரு முறை கீமோதெரபி கொடுப்பதற்கு முன்பும், கருவிலுள்ள குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட வேண்டும். கர்ப்பம் 35 வாரங்களைக் கடந்த நிலையிலும் சரி, பிரசவ தேதி திட்டமிடப்பட்ட மூன்று வாரங்களுக்குள்ளும் சரி…. கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படாது. இதன் மூலம் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு, சிகிச்சைகளை முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் எவ்வித சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. பிரசவம் நல்லபடியாக நிகழும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.