நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எகிப்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ் என்பவர் 7 மாத குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணியாக ஒலிப்பிக்கில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடியிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒலிம்பிக்ஸ். இந்த ஒலிம்பிக்ஸ் களத்தில் நானும், என் எதிரணி வீரர் மட்டும் விளையாடவில்லை. மூன்றாவதாக ஒரு சிறிய ஒலிம்பிக் வீரரும் என்னுடன் இருந்தார். ஆம், இந்த உலகத்தைக் காண காத்திருக்கும் என் குழந்தையும் என்னுடன் களத்தில் இருந்தார்.
நானும் என் குழந்தையும் சேர்ந்து களத்தில் வாள் வீசினோம். இதற்காக இருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய சவால்களை எதிர்கொண்டோம். கர்ப்ப காலம் என்பது கடினமானதுதான். ஆனால் குடும்பத்தையும், கனவையும் ஒருசேர சுமப்பது அதைவிடவும் கடினமானது. சாதிப்பதற்கு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளதான் வேண்டும். அது சுகமான வலிதான். இந்தச் சூழலிலும் நான் ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு உறுதுணையாக இருந்தார் என் கணவர். என் குடும்பமும் எனக்கு உறுதுணையாக நின்றது. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
எகிப்து தேசத்தின் வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ், 2015ம் ஆண்டு எகிப்திய பெண்கள் சேபர் தேசிய குடியரசு போட்டியில் களமிறங்கி வென்றவர். அல்ஜீரியாவில் நடந்த ஆப்பிரிக்க மண்டல போட்டியின் மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார்.
அதையடுத்து 2018 ஆப்பிரிக்க மண்டல சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2014 மற்றும் 2019 இல் வெண்கலப் பதக்கங்களை வென்றார். பெல்ஜியம் டூர்னோய் சாட்டிலைட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். சமீபத்தில் நடந்த 2024 ஆப்பிரிக்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸில் 7 மாத குழந்தையை கருவில் சுமந்தபடி களத்தில் வாள்வீசிய நடா ஹபீஸ் அமெரிக்கரான எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை 15-13 என்ற கணக்கில் தோற்கடித்து முன்னேறினார். ஆனால், தென் கொரிய வீரர் ஜியோன் ஹா-யங்கிடம் 15-7 என்ற கணக்கில் தோற்றார்.