`SC, ST பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… ஸ்டாலின் வரவேற்பு!

பட்டியலின (SC), பழங்குடியின (ST) சமூகத்தினரில் மிகவும் நலிவடைந்தவர்களை துணை வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2004-ல் SC, ST பிரிவினரில் துணைப் பிரிவு உருவாக்குவதில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு எதிராக ஈ.வி.சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) ஒரே மாதிரியான குழு, அதனுள் துணைப் பிரிவு வகைப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீடு

இவ்வாறிருக்க, கடந்த 2010-ல் பஞ்சாப் அரசு தனது மாநிலத்தில் பட்டியலின இட ஒதுக்கீட்டில் வால்மிகிஸ் மற்றும் மசாபி சீக்கியர்களுக்கு 50 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது. ஆனால், இதற்கெதிராக டேவிந்தர் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், ஈ.வி.சின்னையா வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி பஞ்சாப் அரசின் முடிவை ரத்த செய்தது.

இதுபோலவே, 2009-ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பட்டியலினத்தவருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு அறிவித்த 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு, நடைமுறைக்கு கொண்டுவர முடியாமல் போனது. இது தெடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்றது.

கலைஞர் கருணாநிதி

இவ்வாறிருக்க, 2010-ல் பஞ்சாப் அரசின் முடிவை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை, 2020-ல் விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஈ.வி.சின்னையா வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யமாறு ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வுக்கு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் மூன்று நாள்கள் இந்த வழக்கை விசாரித்து, பிப்ரவரி 8-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், பஞ்சாப் வழக்குடன் சேர்த்து தமிழக அரசின் மனு உட்பட மொத்தம் 23 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்புக்கு வந்தது. அப்போது, நீதிபதி பேலா எம்.திரிவேதி தவிர மற்ற ஆறு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பாக SC, ST துணைப் பிரிவு உருவாக்க, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் கிடையாது என்றும், மாநில அரசுக்கு அதற்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “ஆறு ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. அவை, ஈ.வி.சின்னையா வழக்கின் தீர்ப்பை ரத்து செய்திருக்கின்றன. அதோடு, உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் துணைப் பிரிவு மேற்கொள்ள அனுமதிக்கிறோம். நீதிபதி பேலா திரிவேதி மட்டும் இதற்கு மறுத்துவிட்டார்.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசியலமைப்பு பிரிவு 14 சாதி துணைப் பிரிவு வகைப்பாட்டை அனுமதிக்கிறது. அதேசமயம், துணைப் பிரிவு வகைப்படுத்துதலை மாநில அரசின் சேவைகளில் அவர்களின் பின்தங்கிய நிலை மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அளவைக் கணக்கிடக்கூடிய மற்றும் நிரூபிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் செய்ய வேண்டும். அது வெறுமனே அரசியல் தேவைக்காக மட்டும் செயல்பட முடியாது. குறிப்பாக மாநில அரசின் முடிவு நீதித்துறை மறுபரிசீலனைக்கு உட்பட்டது. SC, ST பிரிவைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளால் பெரும்பாலும் முன்னேற முடியாது. வரலாறு மற்றும் சான்றுகள் அதை நிரூபிக்கின்றன. பட்டியலிடப்பட்ட சாதிகள் சமூகரீதியாக வேறுபட்ட வகுப்பாகும்” என்றார்.

மேலும், இந்தத் தீர்ப்பில் தன்னுடைய தரப்பிலிருந்து முக்கிய கருத்தை வலியுறுத்திய நீதிபதி பி.ஆர்.கவாய், “வசதி படைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்களைத் தொடர்ந்து அளிப்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே தோற்கடிக்கிறது. இட ஒதுக்கீட்டின் பலன்கள் மூலம் செல்வச் செழிப்பு நிலையை அடைந்த மக்களை அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத முடியாது. அவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீடு விதிகளில் இருந்து வெளியேறி, மேலும் தகுதியான SC, ST பிரிவினருக்கு வழிவிட வேண்டும் என்ற நிலையை அடைந்துவிட்டனர். அதனால், அத்தகையவர்களை இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து விலக்க, SC, ST பிரிவினருக்குள்ளும் கிரீமி லேயரை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்

இது மட்டுமே, அரசியலமைப்பின் கீழ் உள்ள உண்மையான சமத்துவத்தை அடைய உதவும். மேலும், 1949-ல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரையிலுள்ளபடி, சமூக ஜனநாயகம் இல்லாத வரையில் அரசியல் ஜனநாயகத்தால் எந்தப் பயனும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, 6:1 தீர்ப்பின்படி SC, ST பிரிவினரில் உட்பிரிவு வகைப்படுத்தவும், உள் இட ஒதுக்கீடு வழங்கவும் மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது என உறுதிசெய்யப்பட்டது.

கருணாநிதி – ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைத் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.