கமல், மணிரத்னம், சிம்பு என மெகா கூட்டணி இணையும் `தக் லைஃப்’பின் டப்பிங் வேலை மும்முரமாக நடந்துவருகிறது. கமலும் சிம்புவும் தங்களது போர்ஷன் முழுவதையும் டப்பிங் பேசிவிட்டனர் என்கிறார்கள். இன்னொரு பக்கம் படம் இவ்வாண்டு டிசம்பரில் படம் திரைக்கு வருகிறது என்றும் தகவல் பரவிவருகிறது. படம் குறித்து விசாரித்ததில் சில அப்டேட்ஸ் இங்கே…
மணிரத்னத்தின் ‘நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணையும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன் என பலரும் நடித்துவருகின்றனர்.
கமல் இதில் ரங்கராயா, சக்திவேல், நாயக்கர் என மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சொல்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். சமீபத்தில் கமல், “இந்தப் படத்திற்காக நான், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் சேர்ந்து ‘தக் லைஃப்’ படத்திற்காக இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்தோம். மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார் கமல். அப்படி இதுவரை உருவான இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டுவிட்டன. அதாவது ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜியும் கமலும் எப்படி இணைந்து நடித்திருப்பார்களோ அப்படி ஒரு காம்பினேஷனாக இவர்கள் இந்தப் படத்தில் இருப்பார்கள். பரம்பரை பரம்பரையாக கேங்ஸ்டராக இருக்கும் குடும்பத்தில் நடக்கும் கதை இது! கமலுடன் படம் முழுவதும் சிலம்பரசனும் இணைந்து வருகிறார் என்றெல்லாம் தகவல்கள் சொல்கின்றன.
படத்தின் கதை செர்பியா, ஜெய்சால்மர், டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை எனப் பல இடங்களில் பயணிக்கிறது என்பதால் படப்பிடிப்பும் பல இடங்களில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாதி வரை படப்பிடிப்பும் நடந்து முடிந்துவிட்டது. ஷூட் செய்தவரை கமலும் சிலம்பரசனும் டப்பிங் பேசி முடித்துவிட்டனர். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டதாகவும், ஆனால் இப்போது இந்தியாவிலேயே சில இடங்களில் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.
அதன்படி அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து ஒரு மாதம் அங்கே ஷூட்டிங் நடைபெறுவதுடன், அதன் பிறகு வேறொரு மாநிலத்தில் நடைபெறலாம் என்ற பேச்சும் நிலவுகிறது. கமல் அடுத்து பிக் பாஸ் படப்பிடிப்பிற்குச் செல்வதால் அதனை முடித்த பின், ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் பங்கேற்பார் என்கிறார்கள். எப்படியும் வரும் டிசம்பருக்குள் இதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என்றும் சொல்கிறார்கள்.