நாட்டையே சோகத்தில் மூழ்கடித்திருக்கும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு, மூன்று நாள்கள் ஆகிறது. மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி, அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், நிலச்சரிவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான முண்டகை பகுதியை அணுக முடியாத நிலையே நீடித்து வந்தது. காரணம், முண்டகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தனித் தீவாக மாறியதே. தொங்கு கயிறு மூலமும் ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்றாலும், அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சீறிப்பாயும் முண்டகை ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அவசியத் தேவையாக இருந்தாலும், சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது.
மாற்றி யோசித்த ராணுவம், இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராணுவ தேவைகளுக்காக ஆறுகளின் குறுக்கே எழுப்பும் பெய்லி பாலத்தை இங்கு எழுப்ப முடிவு செய்தனர். இதற்கான தளவாடங்களை டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலமாகவும் வரவழைத்தனர். கொட்டும் மழையிலும் ஆற்றின் குறுக்கே பாலத்தை கட்டி முடிக்கும் சவாலான பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கியது ராணுவம். ராணுவ பொறியியல் வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் என 200 பேர் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
கிட்டத்தட்ட 90 டன் எடையைத் தாங்கக்கூடிய இந்த பிரமாண்ட பாலத்தை 198 அடி நீளத்தில் 24 டன் எடையில் எழுப்பியுள்ளனர். இந்த இரும்பு பாலம் மூலம் சூரல்மலா – முண்டகை இடையே மீண்டும் இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. வாகனங்கள் மூலம் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையிலான பணி என்ற சொல்லிற்கு, வயநாடு நிலச்சரிவு மீட்பு மூலம் உயிரூட்டியிருக்கிறது, இந்திய ராணுவம்.
பேரிடர் களத்தில் பல்வேறு இடர்களைக் கடந்து இந்தப் பாலத்தை கட்டி முடித்திருக்கும் இந்திய ராணுவத்திற்கு, நன்றியும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.