வயநாடு நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. நிலச்சரிவில் காணாமல் போன கிராமங்கள், தரைமட்டமாக அடித்துச்செல்லப்பட்ட வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் மண்ணில் புதையுண்ட மனித உடல்கள் ஆகியவற்றின் காட்சிகள் நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்துகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கிவிட்டது.
ஆயிரக்கணக்கானோர் அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். முடிந்த அளவுக்கு மீட்புக் குழுவினரும் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றனர். சாமானியன் முதல் பிரபலங்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும் நிதியுதவிகளைச் செய்துவருகிறது.
இந்த நிலையில், 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் வயநாடு தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முன்னாள் பிரதமரான தனது தந்தை ராஜீவ் காந்தி இறந்தபோது உணர்ந்ததை தற்போது உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, ராகுல் காந்தியும், வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அவரின் தங்கை பிரியங்கா காந்தியும் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களுக்கு இன்று நேரில் வருகை தந்து, அங்கிருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “என் தந்தை இறந்தபோது நான் உணர்ந்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால், இங்கிருப்பவர்கள் ஒரு தந்தையை மட்டும் இழக்கவில்லை, சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள் என தங்கள் குடும்பங்களை இழந்திருக்கின்றனர். என் தந்தை இறந்தபோது உணர்ந்ததை இன்று உணர்கிறேன்.
ஆனால், இது அதைவிட மிக மோசமானது. ஆயிரக்கணக்கானோர் இதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுடன் நாம் நிற்க வேண்டும். முழு நாடும் வயநாட்டில் கவனம் செலுத்தி உதவுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதேசமயம், அரசியல் விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்கான நேரமோ இடமோ இது கிடையாது. இங்குள்ள மக்களுக்கு உதவி தேவை. எனது கவனம் வயநாடு மக்கள் மீது உள்ளது” என்று தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, “இதுவொரு மிகப்பெரிய சோகம். மக்கள் எப்படிப்பட்ட வலியை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணர முடியும். முடிந்தவரை ஆறுதலையும் ஆதரவையும் வழங்க நாங்கள் இங்கு இருக்கிறோம்” என்றார்.