புதுடெல்லி: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்குச் செல்லும், அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து இந்தியா வரும் மற்றும் டெல் அவிவ்-க்குச் செல்லும் எங்கள் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மத்திய கிழக்கு பகுதியின் சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தக் காலக்கட்டத்தில் டெல் அவிவிலிருந்து புறப்படும் அல்லது அங்கு செல்லும் விமானங்களில் உறுதியான முன்பதிவுகள் செய்திருக்கும் பயணிகளுக்கு மறுபயணம் அல்லது ரத்து செய்தல் கட்டணங்களில் ஒரு முறை தள்ளுபடி வழங்கப்படும்.
எங்களின் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவின் பாதுகாப்பே எங்களின் பிரதான குறிக்கோள். கூடுதல் தகவல்களுக்கு எங்களின் 24 மணி நேர தகவல் மையத்தினை 011-69329333 / 011-69329999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு வாரத்தில் நான்கு விமானங்களை இயக்குகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பில், “டெல்லியில் இருந்து டெல் அவிவுக்க்கு செல்லும் விமானம் ஏஐ139 மற்றும் டெல் அவிவிலிருந்து டெல்லிக்கு வரும் ஏஐ140 விமானம் இரண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விமானங்களிலும் முன்பதிவு உறுதி செய்யப்பட்டிருக்கும் பயணிகளுக்கு மறுபயணம் மற்றும் ரத்து செய்தல் கட்டணங்களில் ஒரு முறை தள்ளுபடி வழங்கப்படும். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு உண்மையில் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.