குன்னூர்: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை வரும் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே நேற்று காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை – மேட்டுபாளையம் இடையே பகல் 2 மணிக்கு புறப்படவுள்ள ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதில் ரயில்வே ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மண்சரிவு அகற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று மற்றும் 4ம் தேதி இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு 3 மற்றும் 5ம் தேதி இயக்கப்பட வேண்டும் என சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், மலை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குன்னூர் உதகை இடையே மலை ரயில் சேவை வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.