ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து அண்மையில் கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவை நடத்தியது.
இதில் கோபிசெட்டிபாளையத்தை சுற்றியுள்ள பல விவசாயிகள் மற்றும் விவசாய முன்னோடிகள் கலந்து கொண்டு கருங்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள், காய்கறி விதைகள், கிழங்கு வகைகள், கீரை விதைகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதோடு நாட்டு மர கன்றுகள், இயற்கை விவசாய உணவு பொருள்கள், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், பாரம்பரிய தின்பண்டங்கள், பனை, தென்னை மதிப்புக் கூட்டு பொருள்கள், கைவினை பொருள்கள், ஆடைகள், இயற்கை விவசாய மற்றும் சிறுதானிய உணவு புத்தகங்கள், இயற்கை விவசாயிகளின் விளைபொருள்கள், உழவர்களின் பண்டைய பயன்பாட்டு பொருள்கள் போன்றவை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தனர். விழாவின் ஓர் அங்கமாக “கிரியேட்” நமது நெல்லைக் காப்போம் அமைப்பு மூலமாக 200 விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் பகிர்வு நடைபெற்றது.
மேலும் திருவிழாவிற்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே “நமது நிலத்தில் எதை விளைவிக்கிறோம்; எதை உண்கிறோம்” என்ற தலைப்பில் விவாத மேடைகளும், காலையில் மலைவாழ் மக்களின் பீனாட்சி இசை கருவியை வைத்து இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, சிறந்த இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு விருதுகளும், சத்தியமங்கலம் சுந்தரராமன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
நல்ல சோறு மற்றும் தமிழர் மரபுகளின் சங்கமம் இணைந்து வழங்கிய அறுசுவை விருந்தில் காலையில் லெமன் கிராஸ் தேனீர், பாரம்பரிய அரிசியில் கஞ்சி, சீரகச் சம்பா மிளகு பொங்கல், பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் மதியம் மாப்பிள்ளைச் சம்பா பழ கேசரி, முளை கட்டிய கம்பு பாயசம், வாசனை சீரகச் சம்பா பிரியாணி, சாமை சாம்பார் சாதம், பவானி புதினா வல்லாரை சாதம், திருச்செங்கோடு சம்பா மூங்கில் குருத்து சாதம், குதிரைவாலி தயிர் சாதம், நாட்டு காய்கறி முளைத்தானிய பால்கறி, பாரம்பரிய வத்தல், நெல்லிக்காய் ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளை திருவிழாவில் கலந்து கொண்ட பல பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி சுவைத்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வேளாண் தொழில் முனைவோர் அணி மாநில செயலாளரும், கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஐந்துணை வேலுச்சாமி பேசியபோது, “கொங்கு மண்டலத்தில் விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவின் முதல் விதையை விதைத்து உள்ளோம்..!
இதன் அடுத்த கட்டமாக தொடர்ந்து பல விதைகள் மற்றும் உணவுத் திருவிழாக்களை நடத்த இருக்கிறோம். இந்த விழாவை பொறுத்தவரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். ஏனெனில் இயற்கை வேளாண்மையை அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்பவர்கள் மாணவர்கள்தான். தற்போது பல விவசாயிகள் பாரம்பரிய விளைபொருள்களை விளைவிக்க தயாராக உள்ளார்கள். ஆனால், அதனை விற்பதற்குத்தான் சரியான இடம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அதனாலயே கோபிசெட்டிபாளையத்தை சுற்றியுள்ள பல விவசாயிகளை இந்த திருவிழாவுக்கு அழைத்து அவர்கள் விளைவித்த பொருள்களை அவர்கள் மூலமாக நேரடியாக மக்களுக்கு காட்சிப்படுத்தி இந்த திருவிழாவில் விற்பனை செய்ய வைத்திருக்கிறோம்.
இந்த திருவிழாவிற்கு முதலில் கூட்டம் வருமா என்று கவலைப்பட்டோம். ஆனால், நாங்கள் நினைத்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்து இருந்தார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், திருவிழாவில் சமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுகள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது. குறிப்பாக விழாவிற்கு வருகை தந்த குழந்தைகள் அனைவரும் ஆர்வமுடன் பாரம்பரிய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.