டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டியதையடுத்து கேதார்நாத் யாத்திரையில் சிக்கிதவித்த 1,500யாத்ரீகர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கனமழையால் சேதம் உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை காரணமாக சாலைகள், தரைப் பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள், விவசாய நிலங்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் கேதார்நாத் வழித்தடத்தில் சிக்கித் தவித்த 1,500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறிப்பாக, பிம்பாலி, ரம்பாடா, லிஞ்சோலி ஆகிய இடங்களிலிருந்து 425 பயணிகள் விமானம் மூலமாக மீட்டு வரப்பட்டுள்ளனர்.
அதே போன்று, சோன்பிரயாக் மற்றும் பிம்பாலி இடையே சிக்கித் தவித்த 1,100 பயணிகள் மாற்றுப்பாதை வழியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.
நிவாரண முகாம்கள்: இதனிடையே பேரிடர் பற்றிய தகவல் அறிந்ததும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனடியாக விரைந்து கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் அனை வரும் உஷார் நிலையில் இருக்க முதல்வர் அறிவுறுத்தினார்.
டெஹ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில் பேரிடர் பாதித்த பகுதிகளை விமானத்தின் மூலம் பார்வையிட்ட முதல்வர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உரையாடினார்.
யாத்திரை நிறுத்திவைப்பு: கேதார்நாத் மலையேற்ற பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.