ஜமா விமர்சனம்: `வந்தனம் வந்தனம் கல்யாணம்!' சிலிர்க்க வைக்கும் நடிப்பில் கூத்துக் கலைஞனின் வாழ்க்கை!

திருவண்ணாமலை மாவட்டம் கிராமம் ஒன்றில் தன் தாயுடன் வசித்து வருகிறார் கூத்துக் கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்). கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) திரௌபதி வேடம் கட்டி ஆடுவதை தன் பிழைப்பாக வைத்திருக்கிறார். எப்போதும் பெண் வேடங்களையே ஆடி, தன் மகனுக்குப் பெண் தன்மையுள்ள உடல்மொழி வந்துவிட்டதால் எல்லோரும் பெண் தரத் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் அவரது தாய் அம்பு (கே.வி.என் மணிமேகலை), கூத்துத் தொழிலிருந்தே தன் மகனை வெளியேற்றப் போராடுகிறார்.

ஜமா விமர்சனம்

மறுபுறம், கூத்துக் கலையையும், தாண்டவத்தையும் மானசீகமாக நேசிக்கும் கல்யாணம், தன் தந்தை இளவரசன் (ஶ்ரீ கிருஷ்ண தயாள்) தொடங்கிய அம்பலவாணன் ஜமாவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும், தன் தந்தை ஆடிய அர்ஜுனன் வேஷத்தைத் தானும் அடவு கட்டி ஆட வேண்டும் என்றும் வைராக்கியத்தோடு இருக்கிறார். இதற்காக தன் தாய், வாத்தியார், காதலி ஜெகா (அம்மு அபிராமி) எனத் தன் மொத்த சுற்றத்தையும் எதிர்க்கிறார். இறுதியில், தன் வாத்தியாரை வென்று ஜமாவை மீட்டாரா, அர்ஜுனன் வேஷம் கட்டினாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பாரி இளவழகனின் ‘ஜமா’ திரைப்படம்.

கூத்தின் தாக்கத்தால் வந்த உடல்மொழி, வெவ்வேறு வேஷங்களில் ஆடும்போது காட்டும் உடல்மொழி என உடல்மொழியிலேயே பல நுணுக்கமான வித்தியாசங்களைக் கொண்டுவந்திருக்கிறார் நாயகன் பாரி இளவழகன். ஆற்றாமையால் உடைவது, வைராக்கியத்தை மனதில் வைத்துக்கொள்வது, ஆக்ரோஷத்தில் வெடிப்பது என வீரியமான நடிப்பை, முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் முதல் படத்திலேயே வழங்கி ஆழமாகத் தடம் பதிக்கிறார். இது இயக்குநராகவும் அவருக்கு அறிமுகப் படம் என்பது கூடுதல் சிறப்பு. வந்தனம் வந்தனம் பாரி! அர்ஜுனன், திரௌபதி, கர்ணன் என ஒப்பனைகளோடு கச்சிதமான கூத்துக் கலைஞராகவும், அவற்றை கலைத்தபின் வஞ்சகமான உண்மை முகத்தோடும் திரையில் ஆதிக்கம் செலுத்தி, படத்திற்குத் தூணாக நின்று வலு சேர்த்திருக்கிறார் சேத்தன். தந்தை, கூத்துக் கலைஞன், ஈகோவால் துடிக்கும் மனிதன் எனப் பயணிக்கும் இளவரசன் கதாபாத்திரத்தை உயிர்ப்போடு திரையிலேற்றியிருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ண தயாள்.

டெம்ப்ளேட் அம்மாவாக வந்தாலும், கே.வி.என் மணிமேகலையின் நடிப்பில் குறையேதுமில்லை. கதாபாத்திரத்தைப் போலவே ஓவர் டோஸ் ஆகியிருக்கும் அம்மு அபிராமியின் நடிப்பு, துருத்திக் கொண்டு நிற்கிறது. வசந்த் மாரிமுத்து, காலா குமார், ஏ.கே. இளவழகன் ஆகியோர் தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். கூத்துக் கலைஞர்களாக வரும் துணை நடிகர்களும் குறைவின்றி நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜமா படத்தில்…

ஒளியமைப்பிலும், இரவுநேர கூத்துக் காட்சிகளைப் படமாக்கிய விதத்திலும் கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கதைக்கருவிற்குக் கனத்தைச் சேர்த்திருக்கிறது. முதற்பாதியில் வரும் நீளமான சிங்கிள் ஷாட் காட்சி கவனிக்க வைக்கிறது. தெளிவில்லாமல் தாவியோடும் திரைக்கதையை முடிந்தளவு நிதானத்தோடும், சுவாரஸ்யத்தோடும் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ. ஆனாலும், நீண்…ட பின்கதையைக் கச்சிதமாகச் செதுக்கத் தவறியிருக்கிறார். இளையராஜாவின் இசையிலும் வரிகளிலும் ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் காதலின் இனிமையைக் கடத்துகிறது. கதாபாத்திரங்களின் அகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இடங்களிலும், திருப்புமுனை காட்சிகளிலும் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் இந்த ‘ராஜா’பார்ட்.

கூத்து நிகழ்த்தப்படும் இடம், அது சம்பந்தமான பொருள்கள் என வட தமிழ்நாட்டுக் கூத்து உலகை உயிர்ப்போடு கண்முன் கொண்டுவந்திருக்கிறது ஶ்ரீகாந்த் கோபாலின் கலை இயக்கம். இதற்கு அபிநந்தினியின் ஆடை வடிவமைப்பும், டி.ரவிச்சந்திரனின் ஒப்பனையும் தூணாக நின்று துணை புரிந்திருக்கின்றன. கூத்துக் காட்சிகளைப் படமாக்கும்போது, லைவ் சவுண்ட் முறையைப் பயன்படுத்தியது கூத்தையும் நாடகத்தையும் இன்னும் நெருக்கமாக்க உதவியிருக்கிறது.

முதல் காட்சியிலேயே பிரதான கதாபாத்திரங்களின் மனநிலையையும் கருவையும் நேர்த்தியாகப் பேசி சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது படம். கூத்து உலகம், அதன் அகம், புறம், அதோடு வாழ்வை இணைத்திருக்கும் மனிதர்கள் என நிதானமாக விவரித்தபடி நகர்கிறது திரைக்கதை. பெண் வேஷம் போட்டு ஆடும் ஒரு கூத்துக் கலைஞனின் பிரச்னைகள், அவனை சமூகம் பார்க்கும் விதம், அதோடு அவன் போராடுவது, அதனால் அவனுக்குள் நிகழும் உளவியல் போராட்டங்கள், அவனுடைய லட்சியம், காதல் எனப் பிரதான பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அதை நேர்த்தியாக விவரித்த விதம் அழுத்தமாகவே பதிகிறது.

ஜமா படத்தில்…

ஆனால், சிறிது நேரத்திலேயே அக்கதாபாத்திரத்தை உறுதியாகப் பின்தொடர் முடியாதபடிக்கு, ஏகத்துக்கும் யூடர்ன் போடுவது, லெஃப் இன்டிகேட்டர் போட்டு ரைட் எடுப்பது, ரைட் இன்டிகேட்டர் போட்டு லெஃப்ட் எடுப்பது எனத் துணை கதாபாத்திரங்களோடு சேர்த்து, பார்வையாளர்களையும் குழப்புகிறது திரைக்கதை.

இதனால், வைராக்கியத்தோடும், குறிக்கோளோடும் பயணிக்கும் கல்யாணத்திடமிருந்து நாம் விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறோம். ஆனால், கூத்து வாத்தியாரின் சதி, உடன் ஆடும் கூத்துக் கலைஞர்களின் பங்களிப்பு, கல்யாணத்துக்கு உறுதுணையாக இருக்கும் பூனை என்கிற கதாபாத்திரம், கூத்தில் நடப்பவற்றைக் கச்சிதமாகவும் திணிப்பில்லாமலும் திரைக்கதையில் இணைத்த லாகவம் போன்றவை இந்தக் குறையைச் சரிகட்ட முயற்சி செய்திருக்கின்றன.

கல்யாணத்துடைய தந்தையின் கதையைப் பேசும் பின்கதை, நிஜமான கூத்தைவிட நீளம். கதைக்கருவிற்குத் தேவையான விஷயங்களைச் சிறிது நேரத்திலேயே கடத்திவிட்டாலும், அதுவே ஒரு தனிப்படம் போல நிற்காமல் ஓடுவது பெரிய மைனஸ். மலை மீது நடக்கும் கோயில் சடங்கு, மீண்டும் திரௌபதி ஆட்டம் ஆடுவது, வாத்தியார் போடும் கர்ணன் வேஷம் எனப் பல உணர்ச்சிகரமான தருணங்கள் பார்வையாளர்களுக்கு அதிர்வைத் தருகின்றன என்றாலும், கல்யாணம் கதாபாத்திரத்தின் மீதுள்ள குழப்பத்தால் அந்த அதிர்வு நம்முள் தங்க மறுக்கிறது.

ஜமா படத்தில்…

வாத்தியாருக்கும், சிஷ்யனுக்குமான உறவுச் சிக்கல், பெண் வேடத்திற்குப் பின்னுள்ள அரசியல், கலைக்குள் இருக்கும் பாலின பேதம், கலைக்கும் கலைஞனுக்குமான உறவு என இரண்டாம் பாதி பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. அதை ஓரளவிற்கு மனத்திற்கு நெருக்கமாக விவரித்திருக்கிறது திரைக்கதை. ஆனால், மீண்டும் அதே ‘கல்யாணம்’ கதாபாத்திரத்தின் குழப்பத்தால், அந்த நெருக்கம் முழுமையாக கைகூடவில்லை. இறுதிப்பகுதி இரண்டு க்ளைமாக்ஸ் போன்ற உணர்வைத் தந்தாலும், அதிலிருக்கும் நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என எல்லாமும் சேர்ந்து, நம்மைத் திரையோடும் அக்கதாபாத்திரங்களோடும் ஒன்ற வைக்கின்றன.

மையக் கதாபாத்திரத்துடனான குழப்பங்கள், அடிக்கடி துண்டுத்துண்டாகும் திரைக்கதை என இந்தக் கூத்தில் சில பிரச்னைகள் வந்தாலும், கூத்து உலகையும், அதோடு பிணைக்கப்பட்ட சாமானிய மனிதர்களையும் நெருக்கமாகவும், ரத்தமும் சதையுமாகவும் காட்டிய விதத்தில் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்து கைதட்டல்களைப் பெறுகிறது இந்த `ஜமா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.