தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜூலை 14 வரை பராமரிப்பு பணி: வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறும்போது, அவ்வழித்தடத்தில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (ஆக.3) முதல் 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி நாளை முதல் 14-ம் தேதி வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகளும் என மொத்தம் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.



தற்காலிக நிறுத்தம்: மேலும், காவல் துறையின் வேண்டுகோள்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆக.14ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.