ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை நாஸ்டால்ஜியாவாகச் சொல்ல முயன்றிருக்கிறது இந்த ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குத் திரும்பும் ஆனந்த், விமானத்தில் தன் இருக்கைக்கு அருகிலிருக்கும் வெங்கட் பிரபுவிடம் தன் பையோகிராபியைச் சொல்லத் தொடங்குகிறார். அது ‘ஆனந்தம் காலனி’ நண்பர்கள், ‘பொறியியல்’ கல்லூரி நாள்கள், காதல், வேலை என அவரின் வாழ்க்கையை ‘The Life of Ananth’ எனச் சுற்றிக்காட்டுகிறது. இதில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் என்ன என்பதைப் பேசுவதே ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் கதை.
கதையின் நாயகன், இயக்குநர் என டபுள் டியூட்டி பார்த்திருக்கும் ஆனந்த்துக்கு, ஸ்கூல் பையன், கல்லூரி இளைஞன், வேலை தேடும் பட்டதாரி என முப்பரிமாணங்கள். இதில் வேலை தேடும் பட்டதாரியாக மட்டும் நடிப்பில் பாஸ் மதிப்பெண் வாங்குகிறார். மற்ற தோற்றங்களில் வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் எக்கச்சக்க திணறல்களோடு தடுமாறுகிறார். டெம்ப்ளேட் கதைக்கு டெம்ப்ளேட் நாயகியாகத் தனக்குக் கொடுக்கப்பட்ட சொற்ப திரை நேரத்தில் வந்து போகிறார் பவானி ஸ்ரீ. ஒவ்வொரு பருவத்திலும் 6 பேர் கொண்ட குழு, நண்பர்கள் கேங்காக வலம் வருகிறார்கள். அதில் ஆர்.ஜே விஜய், வினோத், குகன் பிரகாஷ் ஆகியோர் கவனம் பெறுகிறார்கள். தந்தையாக குமரவேல், தாயாக விசாலினியின் நடிப்பில் குறையேதுமில்லை. பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா ஓவர் ஆக்டிங்கில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்.
ஏ.எச்.காஷிப் இசையில் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஹிப்ஹாப் தமிழா என ஒரு நட்சத்திர பட்டாளமே தலா ஒரு பாடல் பாடியுள்ளது. இதில் தனுஷ் பாடிய ‘ஆலாதே’ பாடல் மட்டும் சற்றே கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வருகிற இடங்கள் மட்டுமே சற்றே ஆறுதல். ஏலகிரி மலை, சிங்கப்பூர் நகரத்தின் பிரமாண்டம் என ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன் தனது ஒளியுணர்வால் ரசிக்க வைக்கிறார். தொடக்கத்தில் கதாபாத்திரங்களை நிறுவுவதற்காக வைக்கப்பட்ட காட்சிகளுக்குப் படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் இத்தனை இரக்கம் காட்டியிருக்கத் தேவையில்லை. யூகிக்கக்கூடிய திரைக்கதையில் அவரது கத்திரி வெட்ட வேண்டிய காட்சிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
கதை ஆரம்பித்த சிறிது நேரத்திலே இது ஒரு நபரின் பல்வேறு பருவங்களைச் சொல்லப்போகிற ‘ஆட்டோகிராப்’ கதை என்று விளங்குகிறது. பொதுவாக இம்மாதிரியான படங்களில் நம்மை வெகுவாக ஈர்ப்பது ‘நாஸ்டால்ஜியா’ உணர்வுதான். ஏற்கெனவே இந்த ‘90ஸ் கிட்ஸ்’ கன்டென்ட்டை பல படங்கள் பலமுறை அலசி ஆராய்ந்துவிட்டதால் திரைக்கதையின் புதுமையோ, நடிகர்களின் திறமையோ ஏதாவது ஒன்று வேலை செய்ய வேண்டியது நிச்சயம் என்கிற கட்டாயத்துடனே ஆரம்பிக்கிறது படம். ஆனால் மிகவும் யூகிக்கக்கூடிய காட்சிகள், நாயகனின் சுமாரான உடல்மொழி என நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது திரைக்கதை.
இரண்டாம் பாதியில் அழகர் (வினோத்) வருகிற காட்சிகள் சற்றே ரசிக்க வைக்கும் ரகளை ரகம். அதே போல நாயகனும் கதாபாத்திரத்துக்குள் அப்போதுதான் வந்து உட்காருகிறார். ஆனால் “Its too late” என்றே நமக்குச் சொல்லத் தோன்றுகிறது. “நம்மள மாறி பசங்க, எங்கள மாறி பசங்க…” என்று பச்சாதாபம் வேண்டுகிற வசனங்கள் ஒரு எல்லைக்கு மேல் “இதுக்கு இல்லியா சார் ஒரு எண்டு” என்று அலற வைக்கின்றன. திரைப்படம் என்பது காட்சி ஊடகம், ஆனால் பின்னணி குரலில் நீளு….ம் வசனங்கள் எந்த வகையிலும் உதவவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிக்காக ஆரம்பத்திலிருந்தே வைக்கப்பட்ட ‘Become a Star’ App யோசனை, ஏ.ஐ டேக்னாலஜி வளர்ந்த இந்தக் காலத்தில் காலாவதியான ஐடியாவாக நமது ஆர்வத்தைத் தூண்டாமல் கடந்துபோகிறது.
மொத்தத்தில் பெரும் இளைஞர் பட்டாளத்தை வைத்து இளமை திருவிழா நடத்தியிருக்க வேண்டிய இந்த `நண்பன் ஒருவன் வந்த பிறகு’ `கிரிஞ்ச்’ திருவிழாவை மட்டுமே நடத்தி நம்மைச் சோதிக்கிறது.