புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதத்தின்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பேசியதாவது;-
“நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, முதுகலை மருத்துவ படிப்புக்கான ஒரு இடம் 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கதிரியக்கவியல் போன்ற துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றால் அதற்கு 12 முதல் 13 கோடி ரூபாய் வரை ஆகும்.
நீட் தேர்வுக்கு முன்பு, மாணவர்கள் மருத்துவ தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் பயணம் செல்ல வேண்டியிருந்தது. இதற்காக பணம் மற்றும் நேரம் செலவானது மட்டுமின்றி, மாணவர்கள் மருத்துவ கல்வி அமைப்பில் இருந்த ஊழலையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பட்டியலை 30 முதல் 45 நிமிடங்களுக்கு வைத்துவிட்டு, பின்னர் மாணவர்கள் வரவில்லை என்பதால் அந்த இடங்களை எங்கள் விருப்பப்படி பயன்படுத்துகிறோம் என்று கூறி வந்தனர். மருத்துவ கல்வி ஒரு வியாபாரமாக மாறியிருந்தது. கந்து வட்டி இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.”
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.