“நீதி முறைமையின் புதிய யுகம் ஆரம்பம்” – ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாக ஆளுநர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்கள், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் நமது தேசிய இலக்குகளை அடைவதற்கு தீர்க்கமான விஷயங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் விவாதங்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வளமான அனுபவமாக இருக்கும். இது அவர்களின் செயல்பாட்டிற்கு உதவும்.



குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

ஜனநாயகம் சுமூகமாக இயங்குவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மத்திய முகமைகள் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றுவது முக்கியம். அந்தந்த மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர்கள் என்ற முறையில், இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆளுநர்கள் சிந்திக்க வேண்டும்.

தரமான உயர்கல்வி என்பது புலனாகாத சொத்து. தனிநபர் மேம்பாடு, சமூக மாற்றம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை தரமான உயர்கல்வி ஊக்குவிக்கிறது. கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் இந்த சீர்திருத்த செயல்முறைக்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும்.

ஏழைகள், எல்லைப்புறப் பகுதிகள், வஞ்சிக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பகுதிகள், வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. நமது பழங்குடியின மக்களில் பெரும் பகுதியினர் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கான வழிகளை ஆளுநர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் சக்தி ஆக்கபூர்வமான செயல்பாடுகளாக பயன்படுத்தப்படுமானால் இளைஞர் வளர்ச்சி மற்றும் இளைஞர் தலைமையிலான வளர்ச்சி என்பன அதிக உத்வேகம் பெறும். ‘எனது இந்தியா’ இயக்கம் இந்த நோக்கத்திற்காக நன்கு சிந்திக்கப்பட்ட அமைப்பை வழங்குகிறது. இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதனால் மேலும் அதிகமான இளைஞர்கள் பயனடைவார்கள்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம் உதவுகிறது. நாட்டில் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்த ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தை பெரிய அளவில் மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஆளுநர்கள் இதற்கு பங்களிக்க முடியும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், மண் வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஆளுநர் மாளிகைகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அனைத்து ஆளுநர்களும் தாங்கள் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு நியாயம் செய்யும் வகையில் மக்களின் சேவை மற்றும் நலனுக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.

ஜக்தீப் தன்கர்: மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக நலத் திட்டங்கள் மற்றும் வியப்பூட்டும் வளர்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை ஆளுநர்கள் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில், “ஆளுநர்கள் மத்திய மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்பட வேண்டும். நலிந்த பிரிவினருடன் இணைந்து செயல்படும் வகையில் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும். ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மாநில மக்களின் நலனில், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளைப் பொறுத்தவரை, முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான நிறுவனம்” என்று கூறினார்.

அமித் ஷா: இரண்டு நாள் மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்களின் போக்கை விவரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கவும் துடிப்பான கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு ஆளுநர்கள் செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஆளுநர்களின் துணைக் குழுக்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் குறித்தும் விவாதிக்கும் அமர்வுகளை நடத்தும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர்கள் தவிர, மத்திய அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வார்கள். துணைக் குழுக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நாளை (ஆகஸ்ட் 3, 2024) நிறைவு அமர்வின் போது குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.