பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் நேற்று (02) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘மாத்தரை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு மருத்துவ (திருத்தச்) சட்ட மூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் அமைச்சர் கௌரவ ரொனி த மெல் அவர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.